பல்லி படுதல்
புறப்பட்ட ஞான்று
பல்லி ஒலித்தது.
உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.
மூச்செறிந்து மீண்டும்
புறப்பட்டேன்.
பல்லி ஒலித்தது.
உள்நுழைந்து
தண்ணீர் பருகியவாறு
சுற்றிலும் தேடினேன்.
எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.
சடங்கெல்லாம் புரட்டென்று
சடுதியில் கிளம்பினேன்.
செல்லுமிடமெங்கும்
வலுத்தது பல்லியின் ஒலி.
ஓடினேன்.
உடன் ஓடிவந்து
குருமௌனி சொன்னார்:
“உன்னைத் துரத்துவது அறம்,
பயலே”.
விளர்இசை
பாறையில் தனித்துக்கிடக்கும்
அலை கொணர்ந்த வெண்சங்கு
யாதின் மதர்த்த யோனியோ?
காற்றதன் இணையோ?
ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்
அருவக் கலவியின்
ஆலிங்கனக் கதறலின்
எதிரொலியோ?
அறுமை இவ்வுலகம்
வற்றிய குளத்தின் பிளவில் நெளியும் இருளைக் கொத்தி ஏமாந்த நாரை
துடிதுடிக்கும் மலரைக் கண்ணுறும்.
இறக்கப் போகும் மலரை உணர்ந்து
ஏறிட்டு விண் பார்க்கும்.
வெளியெங்கும் போர்த்திய
வெயில் வலையுள்
கையறு வெண்நாரை
அலகைத் திறந்து மலருண்ணும்
அறுமை உடையது இவ்வுலகம்.
எந்நீர்?
கணத்தைவிடவும்
குறுகிய காலத்தில்
வாக்கும் மனமும்
அற்ற நிலையில்
மெய் அரும்பி
விதிர்விதிர்த்து
அறிவு சிலிர்த்து
பரிவு சுரக்க அழுதேன்.
ஏன் அழுதேன்?
அழுதது நானா?