பா.ராஜா கவிதைகள்

by olaichuvadi

 சரிவு

நான் சிறுவனாயிருந்த போது
தேவாலய வாயிலில்
கால் நடுங்க நின்றுக்கொண்டு
வாய் விட்டு கதறினார் ஒரு முதியவர்.

“ தொடங்குன எடத்துக்கே வந்துட்டேன் ஏசப்பா”

பலூன்கள்
பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்  என
என் கவனம் இருந்தது.

இந்நள்ளிரவில்
அவரின் முகமும்
ஏக்கம், வேதனை, விரக்தி யாவும் கொண்ட
அவரது குரலும்
நினைவிற்கு வருகிறது.

ஏனோ என்னையறியாது கண் கலங்குகிறது.

காலை அல்லது நாளை
இந்த வாதை தீர்ந்துப்போகும் என
சுவரிலிருந்து பல்லி உறுதிபட கத்துகிறது.

காலையிடமும்
நாளையிடமும்
கடவுளிடமும்
கேட்பதற்கு ஒரே கேள்விதான்.

தொடங்கிய இடத்திற்கே
மீண்டும் ஒருவனை வரவழைக்கும்
இந்த சறுக்கு விளையாட்டிற்கு
என்னதான் பெயர்.

கையாளுதல்

சற்று
ஓங்கியே அறைந்து விட்டேன்.

நறுக்கென கடித்ததற்கான
எதிர்வினைதான்
எனக்கொண்டாலுமேக் கூட
பொய்க்கோபத்தின் நூல்
சில செண்டிமீட்டர் நீளம்
அதிகரித்துத்தான் விட்டிருக்கிறது.

விடு
விளையாட்டில் இதுவும் ஒன்று என
பிள்ளையிடம்
எதுவரை
சமாதானம் கூறுவது.

அடியும்
கடியும்
நட்பு பாராட்டும் நொடி வாய்க்கும் வரை.

நினைவின் பொத்தான்

சட்டை ஒன்று
பரிசளித்தாய்.

பெற்றுக்கொண்டேன்.

மேலிருந்து கீழாய்
மூன்றாவது பொத்தான் போடும்போது
உன்னை
நினைத்துக்கொள்ள வேண்டும் என்றாய்.

சரி என்றேன்.

ஒரு வேளை நாம் பிரிய நேர்ந்தால்
நினைவின் பொத்தான் வரை
தாடி வளர்த்த வேண்டும் என்றாய்.

ஒப்புக்கொண்டேன்.

பெற்றுக்கொள்வதும்
சரி என்பதும்
ஒப்புக்கொள்வதும்
அவ்வளவு எளிதாய் இருந்திருக்கிறது.

திடீர்

ஒரு
திடீர் ஐஸ்கிரீமை
எதிர்பார்த்திருக்கவில்லை.

திடீரென
கன்னத்தில் ஒரு அறையை
எதிர்பார்க்காதது போலவே.

சிறிது
சிறிதாய்
ஐஸ்கிரீமுக்குள் குதித்து
உயிர் நனைகிறது.

முன் விழுந்த
திடீர் அடிக்கு
மனதும் அதனுடன் இணைந்து
உருகுகிறது.

அடியும்
ஐஸ்கிரீமும்
நுழைந்து வெளியேறியது
திடீரின் வழித்தடத்திலே.

அதிசயமாய்
இரு திடீர் சமயத்திலுமே
திடீர் மழை.

பயணம்

மண் தின்னும்
சிறுமியைக்கொண்டிருந்தது
நாங்கள் பயணம் செய்த வீடு.

ஒரு சமயம்
கொடூரமான வேகத்தடை ஒன்று.

ஏறி
இறங்கியப்போது
உச்சந்தலையில் இடித்தது மேகம்.

இருள் முடிந்து
விடிந்த போது
தொப்பலாய் நனைந்திருந்தது வீடு.

எங்கும் எதிலும் நீலம் நீலம்

மஞ்சள் வண்ணப்பெயிண்ட்
சிறு டப்பி இருந்தது.

அவள்
நீல நிறம் கொண்டு வந்தாள்.

வெள்ளை நிற மல்லிச்சரமும்
சிவப்பு ரோஜாவும்
அச்சமயத்துக் கூந்தலுக்கு எடுப்பூட்டியது.

மஞ்சளையும்
நீலத்தையும்
கொட்டிக்கலந்து
அதனுள் எம்பிக்குதித்தோம்.

வானில் நீல வண்ணக்குதிரைகள்.

சிறிது

கொஞ்சம்தான்  விறகிருக்கிறது
அணையாது
காக்க வேண்டுமென்றாள்.

அடுப்பைச் சுற்றி வளைத்தோம்.

அந்த வயதில்
விளங்கவில்லை.

அரிசி குறைவாக இருந்ததை
அம்மா
நெருப்பில் மறைத்தது.

பிற படைப்புகள்

Leave a Comment